Store
  Store
  Store
  Store

நான் பைத்தியம் ஆன க(வி)தை    விதை என்பது என்ன? வறண்டு போன மனங்களில் மழைத்துளியாக இறங்கி சுகம் தருவது மண்ணின் சுகந்தத்தை வெளிக்கொண்டு வருவது தான் கவிதை

      கவிதையின் பணி அத்தோடு முடிந்துவிட்டதா? ரணமாகி போன புண்ணில் மயிலிறகால் வருடினால் மட்டும் போதுமா?  மருந்து போட வேண்டாமா?  எனவே       கவிதைகள் மயிலிறகு  மட்டும் அல்ல மருந்தும் கூட, மருந்து என்றால் கசக்கத்தான் செய்யும்,,

நாக்கும் தொண்டையும் கசப்பை தாங்க முடியாமல் நடுங்கத்தான் செய்யும், ஆனாலும் துப்பி விட முடியாது, துப்பிவிட்டால் நோய் எப்படி தீரும்? உயிரும் உடம்பும் எப்படி வளரும்?

     ஒடிந்து போன கால் எலும்பை ஒட்ட வைப்பதற்கு நீட்டி மடக்கி அழுத்தி சிகிச்சை தருவது ஒரு முறை,

வாய்க்கு இதமான இனிப்பில் மருந்தை மறைய வைத்து மென்மையாக ஊட்டி சிகிச்சை அளிப்பது வேறொரு வகை, கவிஞர்களும் கவிதைகளும் இப்படி தான்.

வானத்து நட்சத்திரங்களை பார்த்து பட்டு கருநீல புடவையில் பதித்த நல்வைரம் என்று பாடிய பாரதிதான் பாதகம் செய்வோரை கண்டால் மோதி மிதித்து விடவும் முகத்தில் உமிழ்ந்து விடவும் சொன்னார்

  மகாகவி பாரதிதான் தற்கால கவிஞர்கள் பலருக்கு ஆதர்ஷண புருஷன்,

யோகி ஸ்ரீ ராமானந்த குருவும் பாரதியை படித்த பிறகு தான் கவிதை எழுத ஆரம்பித்ததாக சொல்வார்,

 பல்வேறு முன்னணி இதழ்களில் அவரின் கவிதைகள் பல வெளிவந்து பாராட்டுதலை பெற்றாலும் புத்தகமாக தொகுத்து முதல் முறையாக நான் பைத்தியம் ஆன க(வி)தை என்ற தலைப்பில் இப்போது தான் வெளியிட்டு இருக்கிறார்

 இந்த கவிதை தொகுப்பில் தென்றலும் இருக்கிறது, புயலும் இருக்கிறது.

    அம்மா என்றால் அன்பு என்று நமக்கு தெரியும், அம்மாவை கடவுளாக சித்திரம் தீட்டாத படைப்பாளிகள் இல்லை,

 நிலாவின் அழகை பார்க்கும் போது அதிலிருக்கும் களங்கம் நமது கண்ணை உருத்துகிறது அல்லவா? அதே போலத்தான் அம்மா என்ற அன்பு வடிவிற்குள் சில களங்கம் இருப்பது குருஜி சுட்டிக் காட்டும் போது நம் மனதிற்கு உறுத்துகிறது

             பெற்ற்  பிள்ளையை
                பிடிக்கும் உனக்கு
             அவனை  பற்றி
                நிற்பவளை
              ஏன் பிடிக்கவில்லை
                அவள் பிறந்த
              வயிறு வேறு என்பதினாலா?

  இந்த கேள்விக்குள் புதைந்து கிடக்கும் யதர்த்தமான உண்மையை நேருக்குநேராக பார்க்கும் போது மனித மனதிற்குள் இனம் கண்டு கொள்ள முடியாத பல உணர்வு சிக்கல்கள் இருப்பதை உணர முடிகிறது.

 ஒரு பெண் தனது மகனையும் மகளையும் பார்க்கும் பார்வையிலிருந்து மருமகளை பார்க்கும் போது மட்டும் ஏன் வேறுபடுகிறாள்? அதே நேரம் மருமகனை இந்தளவு வித்தியாசப்படுத்தி பார்க்கவில்லையே அது ஏன்? என்ற கேள்விகள் நமக்குள் எழும்பி நிற்கின்றன.

 இதற்கான பதிலை தேடி பெற்று விட்டோம் என்றால் பல குடும்ப சிக்கல்கள் மிக சுலபமாக தீர்ந்துவிடும்,

 இருட்டுக்குள் வெளிச்சமும், வெளிச்சத்தில் இருளும் மறைந்து கிடக்கிறது என்பார்கள், அதே போலத்தான் அன்பின் வடிவான தாய்க்குள்ளும் ஒரு பேதம் இயற்கையாகவே இருக்கிறது,

   தாய்மை உணர்வுக்குள் மட்டுமல்ல பெற்ற பிள்ளைகளின் உணர்வுகளுக்குள்ளும் பேதம் மறைந்து இருக்கிறது,

தாய்மைக்குள் மறைந்து இருக்கும் கருப்பு புள்ளி பளிச்சென்று வெளியில் தெரிவதில்லை, ஆனால் வாரிசுகளின் களங்க உணர்வுகள் பளிச்சென்று தெரிந்து விடுகிறது,

 அப்பா நன்றாக யோசியுங்கள் என்ற கவிதையில் அழகாகவும் தெளிவாகவும், நாசுக்காகவும் இந்த பேதத்தை குருஜி சுட்டி காட்டுகிறார்,

நேற்று வரை தாய் தகப்பனின் மீது ஆழமாக பதிந்து இருந்த அன்பு தனக்கென்று குடும்பம், குழந்தை குட்டிகள் வந்தவுடன் மாற்றம் அடைந்து விடுகிறது.

சொந்த புத்திர பாசத்திற்கு முன் பெற்றோர்களின் மீது கொள்ளும் பாசம் கணவன் மனைவிக்குள் நிலவும் பாசம் ஏன் தன்னை தானே நேசிக்கும் பாசம் கூட நகர்ந்து போய் விடுகிறது,

எளிமையான எழுத்து நடையில் குருஜி இதை விளக்கும் போது சொல்வது நியாயம் தானே என்ற எண்ணம் தான் நமக்கு வருகிறதே தவிர இதை எப்படி ஏற்று கொள்ள முடியும் என்ற சிந்தனை யாருக்கும் வரவே வராது.

      ஆயிரம் அடி உயரத்தில் பறந்தாலும் கருடனின் சிந்தனை கீழே கூட்டில் இருக்கும் குஞ்சுகளின் மீது தான் இருக்கும் என சொல்லுவார்கள்

 நாம் உலகம் முழுவதும் சுற்றி வரலாம், ஒரு ஜாண் வயிற்றுக்காக கடல் கடந்து சென்று பாடுபடலாம் ஆனால் நமது எண்ணத்திலும் கனவிழும் பசுமையாக எப்போதும்  நிறைந்திருப்பது சொந்த ஊரின் நினைவுகள் தான்,

 துள்ளித்திரியும் பிள்ளை பருவத்தில் பம்பரம் விளையாடிய, பச்சை குதிரை தாண்டிய, மாட்டு கொம்புக்கு வர்ணம் பூசிய சொந்த ஊரின் நினைவுகள் எந்த வயதிலும் மாறாது,

ஒரே ஊரில் பிறந்து வாழ்ந்து மடிந்து போகும் மனிதர்களுக்கு வேண்டுமானால் சொந்த ஊர் சொர்க்கமாக தெரியாமல் இருக்கலாம் ஆனால் பல காரணங்களால் வெளியூர்களில் வெளிநாடுகளில் வாழவேண்டிய சூழல் ஏற்பட்டவர்களுக்கு பிறந்த ஊரின் ஒரு துளி மண் கூட வைரத்தை விட உயர்ந்தது தான்,

 இந்த எண்ணங்களின் பிரதிபலிப்பாக குருஜியின் சொந்த ஊருக்கு எழுதும் மடல் என்ற கவிதை நம்மை கற்பனை தேரில் பிறந்த கிராமத்திற்கு அழைத்து செல்கிறது

             ஈயம் பித்தளைக்கு பேரிச்சம் பழம் 
             கோரோசனை வாங்கலையோ    கோரோசனை
             குடை  ரிப்பேர்
             அம்மி கொத்தனுமா அம்மி
             என்ற குரல்கள்

              வளையல் காரனிடமும்
              பூக்கார முனியனிடமும்
              வம்பளக்கும் பெண்களின் வெடி சிரிப்பும்

              வண்டி இழுக்கும்
              மாடுகளின் மணியோசை
             அவ்வப்போது எழும்பும்
             குடிகாரர்களின் ஒலம்
             இப்படி எல்லா ஒசைகளும்
             இப்போதும் உன் வீதிகளில் கேட்கிறதா?

      என்று சொந்த ஊரிடம் குருஜி எழுப்பும் கேள்வி அக்கால கிராம சுழலை இன்று நம் கண்ணெதிரே படம் பிடித்து காட்டுகிறது,

 கிரைண்டர், மிக்ஸி வந்த பிறகு அம்மி கொத்துவதை தொழிலாக கொண்டவர்களின் நிலை இப்போது என்னவானது?

நவீனம் என்பது இப்படி எத்தனையோ அப்பாவி மக்களை இல்லாமலேயே செய்துவிட்டதா? என்ற கேள்வியை நமக்குள் கேட்காமலே தட்டி எழுப்புகிறார்,

   அரசியலால் இளைஞர்கள் வீணாகி போவதையும், ரியல் எஸ்டேட் வியாபாரத்தால் பூமி தாயின் பால் சுரக்கும் மடியான விவசாய நிலங்கள் பாழ்பட்டு போவதையும்,

 நாகரீக மோகத்தில் இளைய தலைமுறையினர் பண்பாட்டை கொலை செய்வதையும், சினிமா மோகம் சமுகத்தை சாக்கடையாக்குவதையும்,

 பொருளாசையும் மூடத்தனமான பக்தியும் குடும்பத்தை சிதைக்கும் போது அதை நேருக்கு நேராக அனுபவிக்கும் பொறுப்புள்ள மனிதன் பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு தான் போவான் 
இதை மிக அழகாக அதே நேரம் வேதனையோடு நான் பைத்தியம் ஆன க(வி)தை என்ற  கவிதையில் குருஜி பதிவு செய்கிறார்

.இது தான் இக்கவிதை தொகுப்பின் தலைப்பாகவும் இருக்கிறது. இதிலிருந்து மற்ற கவிதைகளிலும்  பல உண்மைகள் மட்டுமே எழுதப்பட்டிருக்கும் என்று முடிவு செய்யலாம்

  இதிலுள்ள பல கவிதைகள் உஜிலாதேவி இணையத்தளத்தில் வெளிவந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் பாராட்டியது தான்,

 இக்கவிதை தொகுப்பில் விசேஷம் என்னவென்றால் ஒவ்வொரு கவிதைக்கும் கீழேயும் இணையதளத்தில் வெளிவந்த கமெண்ட்டுகள் அப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் கொடுக்கப்பட்டுள்ளது

அதை பார்க்கும் போது இணையதள வாசகர்களின் மனம் மற்றும் அறிவின் விசாலம் புரிகிறது.

 இந்த தொகுப்பை ஒரு முறை வாங்கி பல முறை படித்து பாருங்கள் உங்கள் மனக்கதவையே ஒளிவுமறைவு இல்லாமல் திறந்து நீங்களே பார்ப்பது போலிருக்கும்

விமர்சனம் செல்வி இந்துமதிஉதயகுமார் B.sc


நூல் கிடைக்கும் இடம்

உஜிலாதேவி பதிப்பகம்
ஸ்ரீ நாராயணா மிஷன்
விழுப்புரம் மெயின் ரோடு,
முகையூர் வழி, கடகனூர் அஞ்சல்,
விழுப்புரம் மாவட்டம் 
தொலை எண் +91-9976459986


சங்கர் பதிப்பகம்,
15/12 டீச்சர்ஸ் கில்டு காலனி,
2வது தெரு, இராஜாஜி நகர் விரிவு,
வில்லிவாக்கம்,
சென்னை - 600 049.‌
தொலை‌பேசி : +91-9976459986


 புத்தக விலை தபால் செலவு உட்பட உள்நாடு 50ரூ வெளிநாடு ரூ100